2015ஆம் ஆண்டு வெளியான 'நிபுணன்' படத்தில் அர்ஜுன், சுருதிஹரிஹரன் இணைந்து நடித்தனர். அப்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் தன்னை இறுக்கி அனைத்து உடலில் கைவிரல்களை படர விட்டார் என்று சுருதிஹரிஹரன் 'மீடூ' வில் பாலியல் புகார் கூறினார். இதனை மறுத்த அர்ஜூன் கோர்ட்டில் சுருதிஹரிகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலடியாக சுருதிஹரிகரனும் போலீசில் அர்ஜூன் ஓட்டலில் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் ரிசார்ட்டுக்கு வருமாறு அழைத்தார் என்றும் புகார் அளித்தார். அர்ஜூன் மீது பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், அவதூறு, பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் அர்ஜூன் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சுருதிஹரிஹரன் மீது அர்ஜுன் தொடர்ந்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். இந்நிலையில் நடிகை சுருதி ஹரிகரன் பெங்களூருவில் உள்ள பெண்கள் கமிஷன் தலைவியை சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளார். மேலும் இச்சந்திப்பு குறித்து அவர் நிருபர்களிடம் கூறும்போது.... "மீடூ' வில் அர்ஜூன் மீது நான் கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. அதனை கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறேன். அர்ஜூன் ஆதரவாளர்கள் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். அவர்களால் எனது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்து இருக்கிறேன்" என்றார்.