ஜெயிலர் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார். இதையடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். பின்பு விஜய்யின் 69வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்தது. பின்பு அது கைகூடாமல் போய்விட்டது. இவர் நடிப்பில் கடைசியாக ‘பைரதி ரணகல்’ என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதையடுத்து உத்தரகாண்டா, 45, பைரவனா கோனே பாட மற்றும் ராம் சரணின் 16வது படம் ஆகியவை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் சமீப காலமாக அவருக்கு உடலில் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக ‘பைரதி ரணகல்’ பட புரொமோஷனில் உடலில் பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டார். பின்பு மற்றொரு பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப், சிவ ராஜ்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்து சிகிச்சை நல்ல படியாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க சென்றார். அதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து, மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் அறுவை சிகிச்சை நடக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவுக்குத் திரும்புவேன் என்றும் எமோஷ்னலாக பேசினார். அவருடன் அவரது மனைவி கீதா மற்றும் இளைய மகள் நிவேதா ஆகியோர் சென்றனர். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு சிவ ராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும் அவருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் முருகேஷ் மனோகரன் வீடியோ மூலம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிவராஜ்குமார் அவரது மனைவியுடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அதில், சிவ ராஜ்குமார், “நான் கூட முன்பு பயந்தேன். ஆனால் ரசிகர்கள், உறவினர்கள், சக கலைஞர்கள் மற்றும் மருத்துவர்கள் - குறிப்பாக எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் என்னை வலிமையாக்கினர். நான் கீமோதெரபி செய்தேன். நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் எப்படி அதை சமாளித்தேன் என தெரியவில்லை. ஆனால் இறுதியில், நான் மியாமியில் சிகிச்சைக்கு செல்லும் முன்பு இன்னும் பயந்தேன். இருப்பினும், எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தனர்.
சிறுநீரக சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு, புதியது வைக்கப்பட்டது. உங்கள் எல்லா விருப்பங்களுடனும், மருத்துவரின் ஆலோசனையுடனும், என்னை கவனித்துக்கொள்கிறேன். நான் விரைவில் வலிமையுடன் திரும்புவேன்” என எமோஷ்னலாக பேசினார்.
ನಿಮ್ಮೆಲ್ಲರ ಪ್ರೀತಿ, ಆಶೀರ್ವಾದಕ್ಕೆ ನಾನು ಚಿರಋಣಿ
ಹೊಸ ವರ್ಷದ ಹಾರ್ದಿಕ ಶುಭಾಶಯಗಳು! #2025 pic.twitter.com/4oyg2uXfjg— DrShivaRajkumar (@NimmaShivanna) January 1, 2025