Skip to main content

"சங்கியுமல்ல அங்கியுமல்ல லுங்கியுமல்ல..." - மீண்டும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

seenuramasamy wishes pm modi

 

புதிய நாடாளுமன்றக் கட்டடம் கடந்த 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் மோடி நிறுவினார். கட்டடம் திறக்கப்பட்டதை அடுத்து, அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டது. மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து கௌரவித்தார். 

 

இந்நிகழ்வை ஒட்டி பலரும் அவர்களது கருத்தை கூறி வந்தனர். அந்த வகையில் இயக்குநர் சீனு ராமசாமி கடந்த 28ஆம் தேதி, "தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர். பெரிய விசயம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு கீழ் பலரும் 'மோடி ஆதரவாளரா நீங்கள்...' எனவும், 'சங்கி தனம் வேண்டாம் எனவும்...' கமெண்ட் செய்திருந்தனர். 

 

இதனைத் தொடர்ந்து, இன்று இந்தப் பதிவை மேற்கோள்காட்டி, "நான் சங்கியுமல்ல, அங்கியுமல்ல, லுங்கியுமல்ல, டர்பன்னும் அல்ல, நீலவான் அல்ல. மேலும் தமிழ் தேசியம், திராவிடம், இன்னபிற ஜாதியம் இப்படி எல்லையில்லா உலகில் உள்ள அனைத்து பிரிவினர்களிடமும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைக்கு குரல் தரும் சாமான்யன். 'எல்லோரையும் குளித்து வரச்சொன்னாயே நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய்' என எழுதி வள்ளுவத்துக்கு விளக்கவுரை தந்து வான் உயர சிலை வைத்த முத்தமிழறிஞரின் தமிழ் நேசன். 

 

யதார்த்த கலைச்சிற்பி பாலுமகேந்திரனின் பள்ளியின் கடைசி இருக்கை மாணவன். மக்கள் திலகத்தின் வள்ளல் குணத்தை போற்றுபவன். கிருபானந்த வாரியாரின் தமிழ் மாணாக்கன். தமிழ் மொழிக்கு புகழ் செய்வோரை வாழ்த்துபவன். நம் பாரதப் பிரதமருக்கு பலர் சொன்ன பிறந்த நாள் வாழ்த்து போல் நீதி வழுவாத தமிழ் 'செங்கோல்' தமிழ் ஓதுவார்கள் மரியாதை செய்யப்பட்டதை வாழ்த்தினேன். தமிழ்நாட்டில் மூலஸ்தானத்துள் செல்ல முடியாத ஓதுவார்கள். புதிய பாராளுமன்றத்தில் போவதும் எனக்கு முக்கியமாகப்பட்டது. மீண்டும் பாரதப் பிரதமர் மோடிக்கு அன்பு நன்றி வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்