சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் மே 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா, சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் சீனு ராமசாமி பேசுகையில், "18 வருடத்திற்கு முன்பு நானும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு உருவானது. ஒரு அதிகாலையில் ரமண மகரிஷி புகைப்படத்திற்கு முன்னாடி கம்போசிங்கிற்கு உக்காந்தோம். நான் கதை சொல்லி முடித்தவுடன் ஹார்மோனியத்தில் கை வைத்து பாட ஆரம்பித்தார். 'அகதியாய் நிற்கதியாய் பிறந்த மண்ணிலே...' என்று பாடினார், இரண்டு அரை வருஷம் படமே இல்லாம போச்சு. மறுபடியும் இரண்டு அரை வருஷம் கழிச்சு அவரை போய் பார்த்தேன். என்னை பார்த்தவுடனே சொன்னாரு 'நான் உனக்கு அந்த பல்லவிய போட்ருக்க கூடாது யா' என்று. அதன் பிறகு பாடல் வரிகள் எல்லாம் எப்படி இருக்கும் என்பதுல ரொம்ப ஆர்வமா இருந்தேன். இந்த படத்திற்கு பாடல் வாங்குவதற்கு எனக்கு போதிய நேரம் இல்லை. அதனால் படத்தை முழுமையாக எடுத்துவிட்டோம். படத்தை பார்த்தார் என்று சொன்னால் முழு படத்திற்கும் மியூசிக் போட்டுவிடுவார்.
அதாவது பாடல்கள் எழுதப்படுவதற்கு முன்பாகவே படமாக்கப்பட்டுவிட்டது. பாடலுக்கு வரிகள் என்ன என்பதில் எனக்கு ஒரு ஆசை. பா.விஜய்யின் வரிகள் என்னிடம் வந்தன. வாங்கி படித்தேன் 'நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு ஏ ராசா...' என்று இருந்தது. பிறகு மூணே நாளுல கரோனா வந்துடுச்சு. 15 நாளுல லாக் டவுன் போட்டான். டப்பு டப்பு-னு பரவ ஆரம்பிச்சிடுச்சு மேல இருக்கவன் சாக ஆரம்பிச்சுட்டான், கீழ இருக்கிறவன் செத்துட்டான். பயமாயிருச்சு, மரண பயமாயிருச்சு மாமனிதன் படம் மறந்து போயிருச்சு. இரண்டு வருஷம் கடந்திருச்சு. பிறகு கவிஞருக்கு போன் போட்டன், எழுதுறது எழுதிறீங்க சரணத்தோடு எழுத வேண்டியதானே. 'நினைத்தது கிடைச்சிது , இருக்கிறத வச்சி சந்தோசமா இரு' இப்டினு பாசிட்டிவா ஏதாவது எழுத வேண்டியதுதானே. 'நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு ஏ ராசா...' உலகத்துல இந்த இரண்டு வார்த்தையை சந்திக்காத மனிதரே கிடையாது. இந்த பாட்டுக்கு தேசிய விருது கிடைக்கும் என அவரிடம் கூறினேன்" என்று பேசினார்.