96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் தொடர்ச்சியாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் படக்குழு. அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியாட்டு விழா தேதியை ஆவணி 15 (31.08.2024) என அறிவித்திருந்தனர். அந்த நாளில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இதே போல் இப்படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரில் புரட்டாசி 11 (27.09.2024) என்று போஸ்டரில் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து கடந்த 7ஆம் தேதி வெளியான இப்படத்தின் டீசரை ‘கிளர்வோட்டம்’ என்று குறிப்பிட்டிருந்தனர். டீஸர் வெளியாகி பார்வையாளர்களிடையே கவனம் பெற்று வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “மெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இப்படத்திற்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்டியதற்கும், அனைவரும் ஆங்கிலத்தில் டீசர் என்று கூறிக்கொண்டிருக்க அதனை ‘கிளர்வோட்டம்’ என்று அழகுத்தமிழில் மொழியாக்கம் செய்தமைக்கும் படக்குழுவினருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், பாராட்டுகளும்.
இப்படம் உருவாக்கத்தில் பங்கு கொண்ட துறைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடும் வழக்கத்தை மாற்றி வண்ணக்கலவை, ஒளிக்கலவை, கள ஒளிப்பதிவு, நிழற்படம், ஆடை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு என அனைத்தையும் அழகுத்தமிழில் குறிப்பிட்டிருப்பது மிகச்சிறப்பு. கிளர்வோட்டம் என்ற சொல்லாக்கம் எந்த அளவிற்கு மிகச்சரியாக அமைந்துள்ளது என்பதை எண்ணி எண்ணி வியக்கின்றேன். தமிழில் மட்டும்தான் இப்படியான பொருள்பொதிந்த கலைச்சொற்களை உருவாக்க முடியும். மற்றமொழிகளில் இப்படியான கலைச்சொற்களை எளிதில் உருவாக்கிவிட முடியாது. பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது. ஆனால், பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லதனால் தான் தமிழ் உயர்தனிச் செம்மொழியாகப் போற்றப்படுகிறது. இதற்காகவாவது இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வேண்டுமென நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளது.