பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மைக் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
இருப்பினும் பிரதமர் மோடி படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். இதனைத்தொடர்ந்து பாஜக ஆளும் ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இப்படத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்ட மாவட்டத்தில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் திரையிடப்படுவதையொட்டி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு 4 க்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடுவதற்கும், போராட்டங்கள் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 21 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.