இயக்குனர் பாலுமகேந்திரா தமிழ் திரையுலகின் மிக முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். இன்று (20 மே) அவரது பிறந்தநாள். அவரது இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் நடித்துள்ளனர். கமல் நடித்த 'மூன்றாம் பிறை' மிகப்பெரிய வெற்றியையும் பெற்று கமலுக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. ஆனால், ரஜினி நடித்த 'உன் கண்ணில் நீர் வடிந்தால்' தோல்வியடைந்தது. அந்த காலகட்டத்தில் இருந்த பல நடிகர்களுக்கும் பாலு மகேந்திரா இயக்கத்தில் நடிக்க ஆசை இருந்தது. அதில் சத்யராஜும் ஒருவர். சத்யராஜ், பாலு மகேந்திரா குறித்த தனது நினைவுகளை, முன்பு ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து...
"நான் அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை. 'உறங்காத நினைவுகள்' என்ற படத்தில் அவரது ஒளிப்பதிவில் நடித்தேன். அதில் சிவக்குமார் அண்ணன்தான் ஹீரோ. பாலுமகேந்திரா குறித்து அவரிடம் பணியாற்றியவர்கள் சொல்வார்கள், 'எல்லா பிள்ளைகளையும் வாழவைத்தவர் அவர்' என்று. அவரது பிள்ளைகளை மட்டுமல்ல, வெளியே நின்று வேடிக்கை பார்த்த என் போன்றவரையும் வாழ வைத்தவர். அவரது படங்களைப் பார்த்து நடிப்பை கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம்.
இதெல்லாம் நடித்து பல ஆண்டுகள் கழித்து நான் 'கண்ணாமூச்சி ஏனடா' என்ற படத்தின் ஷூட்டிங்குக்காக வி.ஜி.பிக்கு போயிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்போது, பாலுமகேந்திரா சார் போன் பண்ணார். 'சத்யராஜ் நாம ஒரு படம் பண்ணணுமே'னு சொன்னார். 'சார், வண்டியிலதான் இருக்கேன். அப்படியே உங்க ஆபீஸ்க்கு வந்துடவா?'னு கேட்டேன். 'இல்ல, இல்ல, அவ்வளவு அவசரமா இல்ல. நான் எல்லாம் ரெடி பண்ணிட்டு சொல்றேன்'னு சொன்னார். ஆனால், அந்தப் படமும் நிகழவில்லை.
இப்படி, பாலுமகேந்திரா சார் முன்னாடி நடிச்சு பாராட்டு வாங்கணும் என்ற என் ஆசை நிறைவேறாமையே இருந்தது. நண்பர் தங்கர் பச்சான் மூலம் அது நிகழ்ந்தது. அவர் இயக்கிய 'ஒன்பது ரூபாய் நோட்டு' படத்தில் 'மாதவ படையாச்சி' என்ற பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்குத் தந்தார். அந்தப் படத்தை பாலு மகேந்திரா சாரை அழைத்து திரையிட்டார். படம் பார்த்த பாலு மகேந்திரா சார், என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார். அவர் என்னை அணைத்த போது நான் கவனித்தேன். அவர் கண்கள் கொஞ்சமாகக் கலங்கியிருந்தன. அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. 'கடலோர கவிதைகள்' பாத்துட்டு சிவாஜி கணேசன் சாரும் 'வேதம் புதிது' பாத்துட்டு வாத்தியார் எம்.ஜி.ஆரும் பாராட்டுனாங்க. அந்த சந்தோஷம் பாலுமகேந்திரா பாராட்டுனப்போ கிடைச்சது."