கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென அவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எஸ்.பி.பி. உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண், அவர் உடல்நிலை சீராக உள்ளதாக விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி இன்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி. பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில் நடிகர் சத்யராஜ் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்...
"எஸ்.பி.பி சார், உலகம் முழுக்க வாழ்கிற கோடிக்கணக்கான மக்களுடைய மகிழ்ச்சிக்கு உங்களுடைய குரல் முக்கியமான காரணம். அந்த குரலை மறுபடியும் கேட்க வேண்டும். 75 படத்தில் வில்லனாக நடித்த நான், 100 படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு பல முக்கியமான காரணம் இருக்கிறது. அதில் உங்களுடைய குரல்வளம் மிக முக்கியமான காரணமாக கருதுகிறேன். 'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', 'கொடியிலே மல்லிகைப்பூ', 'ஆண்டவனப் பார்க்கணும்' எனச் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் பூரணமாக குணமடைந்து வர வேண்டுமென்று பொதுநலத்துடன் வாழ்த்துறேன், சுயநலத்துடன் வாழ்த்துறேன். சீக்கிரம் குணமடைந்து வந்துருங்க பாலு சார்" என கூறியுள்ளார்.