பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் 2 பட படப்பிடிப்பு சமீபத்தில் சின்னையில் தொடங்கப்பட்டது. அப்போது கடந்த 16ஆம் தேதி, சென்னையில் சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில், நடந்த படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் 20அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். கீழே விழுந்ததில் அவருக்கு மார்பில் அடிப்பட்டு, நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிழந்துள்ளதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சம்பவம் திரையுலகிலனர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து சர்தார் 2 படக்குழு சார்பில், படத்தின் தயாரிப்பு நிறுவனம், சண்டை கலைஞர் ஏழுமலை காலமானதை ஒட்டி இரங்கல் தெரிவித்தது. பின்பு கார்த்தி ஏழுமலை உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் சண்டைக் கலைஞர்கள் மற்றும் லைட் மேன்கள் படப்பிடிப்புகளில் உயிரிழந்து வருவதால், நாளை மறுநாள் (ஜூலை 25) சென்னையில் நடக்கும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படவுள்ளதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படப்பிடிப்பு நடக்கும் போது தகுந்த பாதுகாப்பு கருவிகள், ஆம்புலன்ஸுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்குத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம். பெரும்பாலான நிறுவனங்கள் இதை பின்பற்றுவது இல்லை. அதனால் சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 25-ம் தேதி கமலா திரையரங்கில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம் நடத்துகிறோம். அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக, சென்னையில் உள்ளூர் படப்பிடிப்புகள் (சின்னத் திரை, பெரியதிரை) நடைபெறாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.