கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில், பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது நிலவும் சூழல், மழையால் மிகவும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. தென் தமிழகத்திலிருந்து வெளிவரும் காட்சிகள் நெஞ்சை உடைக்கிறது. பாதிக்கப்பட்ட அனைத்து சகோதர சகோதரிகளின் பாதுகாப்பிற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நாம் ஒன்றிணைந்து விரைவான நீண்ட காலத் தீர்வைக் காண்போம் என்று நம்புவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
The current scenario and forecast of rains in and around Tamil Nadu is so devastating. The visuals coming out of South TN is heart breaking. Pray for the safety of all our dear brothers and sisters who are affected. Hope we get together and find a rapid long-term solution.…— Santhosh Narayanan (@Music_Santhosh) December 18, 2023