Skip to main content

“அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை...” - சந்தோஷ் நாராயணன்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

santhosh narayanan about cyclonemichaung

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த சூழலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழைநீர் மற்றும் கழிவு நீரை ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது” எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “10 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. முழங்கால் அளவு தண்ணீர் மற்றும் குறைந்தது 100 மணிநேரம் மின்வெட்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பகுதியில் நடக்கும். இந்த ஆண்டு ஏற்கனவே புதிய எல்லைகளை அமைத்துள்ளது. வேடிக்கை என்னவென்றால், இது வரலாற்று ரீதியாக ஒரு ஏரியோ அல்லது தாழ்வான பகுதியோ அல்ல. கொளப்பாக்கம் என்று பெயரிடப்பட்ட சென்னையில் மற்ற எந்தப் பகுதியையும் விட எங்களிடம் ஏராளமான திறந்தவெளி நிலங்களும், பயன்பாட்டில் இருக்கிற குளங்களும் உள்ளன. வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழைநீர் மற்றும் கழிவு நீரை ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது. அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்பாளர்களை உண்மையில் தாக்கியுள்ளது. 

 

இந்நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவது அல்லது மருத்துவ எமர்ஜென்ஸியில் இருப்பது போன்றவை ஏற்பட்டு மரணத்தைக் கொண்டு வருகிறது. அவர்களுக்கு ஜெனரேட்டர் மூலமாகவும் பிற முக்கியமான தேவைகளுக்கு உதவவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து மீட்டு வருகிறேன். மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன. சென்னைவாசிகளின் ஆன்மாவுக்குப் பாராட்டுகள். நான் எங்கு சென்றாலும் மிகவும் நெகிழ்ச்சியும் பாசிடிவிட்டியும் இருக்கிறது. தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்றும் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்