நடிகை சமந்தா நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் கடந்த ஜூன் மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், இந்தப் படத்துக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஓடிடி பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார். பிலிம்பேர் பத்திரிகையின் மூலம் இந்தியாவில் ஆண்டுதோறும் சினிமா துறையில் சிறந்த படைப்புகள் மற்றும் படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான ஓடிடி பிலிம்பேர் விருது வழக்கும் விழா மும்பையில் நேற்று (9.11.2021) நடைபெற்றது. இவ்விழாவில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது சமந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தொடரை இயக்கியதற்காக இயக்குநர்கள் ராஜ் மற்றும் கிருஷ்ணா டிகே இருவருக்கும் சிறந்த இயக்குநர்களுக்கான ஓடிடி பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. மேலும் இந்த தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது மனோஜ் பாஜ்பாயிக்கும், துணைநடிகருக்கான விருது ஷரீப் ஹாஸ்மிக்கும் வழங்கப்பட்டுள்ளது.