பொதுவாக ரசிகர்களுக்கு ஒரு நடிகர் அல்லது நடிகைகளை பிடித்து போய் விட்டால் அவர்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று பார்ப்பார்கள். திரையரங்கிற்கு முன் அவர்களுக்கு பேனர், போஸ்டர் வைத்து அதில் பாலபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில பேர் அவர்களின் பெயரில் நலத்திட்ட உதவிகளை செய்வார்கள். அந்த பிரபலத்தின் ரசிகர் மன்றங்களில் உறுப்பினராக இணைந்து பணியாற்றுவார்கள்.
இவை அனைத்தும் வழக்கமாக இந்தியாவில் நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சில ரசிகர்கள் தனித்துவமாக அன்பின் வெளிப்பாடாக கோவிலை கட்டுவார்கள். அந்த வகையில் தமிழகத்தில் நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டி அழகு பார்த்தார்கள் அவரது ரசிகர்கள். அதைத் தொடர்ந்து நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு கோவில் சிலைகள் உள்ளது. இந்த லிஸ்டில் தற்போது புதிதாக இணைந்துள்ளார் சமந்தா.
சமந்தாவுக்கு தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட் வரையிலும் ஒரு கணிசமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. அப்படி ஆந்திரா மாநிலம் குண்டூர் அருகே பாபட்லா மாவட்டத்தில் உள்ள சந்தீப் எனும் ரசிகர் அவரது வீட்டின் ஒரு பகுதியில் சமந்தாவுக்கு கோவில் கட்டி வருகிறார். இதனை சமந்தாவின் பிறந்தநாளான நாளை (28.04.2023) திறக்க திட்டமிட்டுள்ளார். சந்தீப், இதுவரை சமந்தாவை நேரில் பார்த்ததில்லையாம் ஆனால் அவரது படங்களுக்கு தீவிர ரசிகராம். அதோடு பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் சமந்தா செய்து வரும் நலத்திட்ட உதவிகளால் அவர் மீது மதிப்பு கூடி இக்கோவிலைக் கட்ட முடிவெடுத்துள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது.