தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த ஆகஸ்டில் கொடி அறிமுகம் செய்து, அக்டோபரில் முதல் மாநாட்டை நடத்தினார். மாநாட்டில் விஜய் பேசியது அரசியலில் பல விவாதங்களை எழுப்பியது. இதற்கிடையில் விஜய்யின் 69வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியானது.
அதன் பிறகு அண்மையில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விஜய் உரையாற்றியிருந்தார். அதில் ஆளும் கட்சியை விமர்சித்துப் பேசியும், அதன் கூட்டணிக் கட்சியான வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி குறித்தும் பேசியிருந்தார். இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மகனின் அரசியல் வருகைப் பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், “விஜய் கண்டிப்பா ஜெயிப்பார். அவருடைய அரசியல் மூவ் நல்லா இருக்கு” என்றார். அதைத் தொடர்ந்து விஜய் வி.சி.க. கட்சியுடன் கூட்டணி வைப்பாரா? அவரது பேச்சால் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மாறியதாக கருத்துகள் வருகிறது அதைப் பற்றி சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள் கேள்விகளை அடுக்கினர். அதற்கு அவர் பதிலளிக்காமல் கடந்து சென்றார்.