கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாகத் தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து பல முறை விசாரணை நடத்தியது. இது தொடர்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் கடந்த 12 ஆம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 20 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
அதே தேதியில் நடிகை நோரா ஃபதேஹி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் 15 ஊடகங்கள் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் கொடுத்த மனுவில், "என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்யும் நோக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என் பெயரை இந்தப் பணமோசடி வழக்கில் தேவையின்றி இழுத்துள்ளார். என் புகழுக்குக் களங்கம் விளைவிக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் தன்னுடன் போட்டி போட்டு ஜெயிக்க முடியாமல் இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.