![robo shankar](http://image.nakkheeran.in/cdn/farfuture/FLVi2ynwQHwp1jWZPrPXjX2p0SZTwtxLTPCo0RoZrMg/1599801156/sites/default/files/inline-images/robo-shankar_1.jpg)
விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு போன்று நடித்ததால் 'வடிவேல் பாலாஜி' என புகழ் பெற்றவர்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் உடல் மொழியுடன் தனது உடல் மொழியையும் கலந்து மக்களை மகிழ்வித்து வந்தவர் வடிவேல் பாலாஜி. மதுரையைச் சேர்ந்த பாலாஜி நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்து வாய்ப்புகள் தேடிய நிலையில், சின்னத்திரையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனையடுத்து காமெடி நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளையும், உடல் மொழிகளையும் வெளிப்படுத்தி சின்னத்திரையில் மக்களை மகிழ்வித்து வந்தார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி. பொருளாதார பிரச்சனை காரணமாக அங்கிருந்து வேறு ஒரு சிறிய தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதன்பின், வீட்டுக்கு வந்த அவரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. இந்நிலையில், 9ஆம் தேதி நள்ளிரவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத் துடிப்பு சீராக இல்லாததால், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இந்நிலையில் நேற்று வடிவேல் பாலாஜி (வயது 42) உயிரிழந்தார்.
இந்நிலையில் வடிவேல் பாலாஜியுடன் தனது பயணத்தை தொடங்கியவரும், அவரின் நண்பரும், காமெடி நடிகருமான ரோபோ சங்கர் உருக்கமான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடன் 19 ஆண்டுகள் பயணித்த கலைஞன். சின்னத்திரையில் முக்கியமான கலைஞன். வடிவேல் பாலாஜி மரணமடைந்த செய்தியைக் கேட்டு எனக்கு பேச்சு வரவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் மேடையில் ஒரே ஆளாக அனைவரையும் கட்டிப்போட்டு சிரிக்க வைக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞன். மரணம் இப்படியெல்லாம் வருமா என்பதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.
10 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, என் மனைவி உள்ளிட்ட நண்பர்கள் சென்று நலம் விசாரித்து திரும்ப வந்துவிடுவாய் நண்பா என்று கூறிவிட்டு வந்தார்கள். அடுத்த 10 நாட்களில் இப்படி ஒரு செய்தியைக் கேட்கும்போது என்னால் தாங்க முடியவில்லை. இந்த மாதிரி நேரத்தில் தான் கடவுள் மீது கொஞ்சம் வெறுப்பு வருகிறது. நல்ல கலைஞனுக்குக் கூட இப்படி ஒரு சாவைக் கொடுப்பதா என்று. வடிவேல் பாலாஜியின் ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார்.