சினிமா ஸ்ட்ரைக்கிற்கு பிறகு படங்கள் வெளியாவதை முறைப்படுத்தும் வகையில் விஷால் தலைமையிலான திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி மூலம் படங்கள் வெளியாகி வருகின்றது. இதற்கிடையே ஆர்.கே.சுரேஷ் தயாரித்து, நடித்த பில்லப்பாண்டி படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியை ஆர்.கே.சுரேஷ் ராஜினாமா செய்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது... "விஷால் தேர்தலில் நிற்கும் போதே சிறு படங்களுக்கு நன்மை செய்யவே தேர்தலில் போட்டியிடுவதாக வாக்குறுதி கொடுத்தார். வெற்றி பெற்ற பின்னரும் அதையே கூறி வந்தார். ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் ரிலீஸ் சிக்கல் நிலவுகிறது. படங்கள் வெளியிடுவதில் தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.
எனவே சிறுபட தயாரிப்பாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளோம். விஷாலால் அவர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. எல்லோரிடமும் பிரச்சினையில் ஈடுபடுகிறார். அவரது செயல்பாடுகள் சரியில்லை. எனக்கும் விஷாலுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. நாங்கள் இன்னும் நண்பர்கள் தான்" என்றார். மேலும் 'உத்தரவு மகாராஜா' படத்தை தயாரித்து நடித்த உதயாவும் தனது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த வாரம் வெளியான 'திமிருப்புடிச்சவன்' படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் முன்னுரிமை கொடுத்தது காரணமாக இவர்கள் இருவரும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஷாலின் நெருங்கிய நண்பர்களாக இருந்த ஆர்கே.சுரேசும், உதயாவும் விஷால் மீது குறை கூறி சங்கத்தில் இருந்து விலகி இருப்பது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.