கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழில் ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் ‘பிக்பாஸ்’ பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, பூவையார், மனோபாலா, மாரிமுத்து, ‘பிளாக்’ பாண்டி, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், நடிகை பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் ஆகிய இருவரும் இப்படத்தை இயக்கியுள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நேற்று (14.3.2022) நடைபெற்றது. இதில் கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, தங்கர்பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இவ்விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.கே செல்வமணி,"கே. எஸ் ரவிக்குமார் தயாரித்திருக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தை எப்படி விளம்பரப்படுத்துவது என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். ரோபோ ஒன்றை வரவழைத்து, படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார். இது அனைவரையும் கவர்ந்திருக்கிறது. மனிதர்கள் எப்போதும் அன்பு செலுத்துவதற்கு தயாராகவே இருக்கிறார்கள். என்னுடைய தந்தையார் 50 ஆண்டு காலமாக ஒரே சைக்கிளை வைத்திருந்தார். நான் இயக்குநராக வெற்றி பெற்று பத்துக்கும் மேற்பட்ட கார்களை வாங்கினாலும், அவர் சைக்கிளில் செல்வதை விடவில்லை. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது,‘ சைக்கிளை நான் 50 வருடமாக வைத்திருக்கிறேன். அதன் மீது இனம் புரியாத பாசம் ஒன்று இருக்கிறது.” என்றார். ஈ.டி. என்ற ஒரு படம் வந்த போது, அதன் அறிமுகத்தை, தோற்றத்தை எந்த ரசிகரும் விரும்பவில்லை. என்றாலும், ஈ.டி பூமியிலிருந்து விடைபெற்று செல்லும் காட்சியில், அனைவரின் கண்களிலும் கண்ணீர் வந்தது. அதுதான் மனிதன். தயாரிப்பாளர் கே எஸ் ரவிக்குமார் உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்திலிருந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை தெரியும். அப்போதும் அவர் உதவி இயக்குநர்களுக்கு உதவியாக இருந்தார். தற்போது அவர்களுக்கு பட வாய்ப்பு அளித்து வாழ்க்கையை வழங்கியிருக்கிறார். இயக்குநர் சங்கத்திற்காக எப்போதெல்லாம் நிதி உதவி தேவைப்படுகிறதோ.. அப்போதெல்லாம் அவராகவே நன்கொடை வழங்கி விடுவார். அவருடைய நல்ல மனதிற்கும், தரமான படைப்புகளை வழங்குவதில் அவருடைய ஈடுபாட்டிற்கும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்