பாலிவுட்டில் 'கேங்ஸ் ஆஃப் வசிப்பூர்', 'ஃபுக்ரே', 'கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா. சமீபத்தில் பிராந்திய ராணுவ கமாண்டர் கூறியதை ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானிடமிருந்து முழுமையாகத் திரும்பப் பெற நாங்கள் தயாராக உள்ளோம். அரசின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம். இந்த ஆபரேஷனை விரைந்து முடிப்போம். போர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு எங்களது பதில் வேறு மாதிரி இருக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்தப் பதிவிற்கு நடிகை ரிச்சா சதா, "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்டை பார்த்த ரசிகர்கள் அவர் ராணுவத்தையும் 2020ல் சீனப் படைகளுடன் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களையும் அவமதித்ததாகக் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து நடிகை ரிச்சா சதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் "இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. அப்படியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களும் ராணுவத்தில் இருந்தவர்கள். ராணுவம் எனது ரத்தத்திலே உள்ளது.
சர்ச்சைக்கு உள்ளான 3 வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு நெருக்கமானவர்கள் கூட இந்திய-சீனப் போரில் பங்கேற்றனர். ராணுவம் எனது ரத்தத்தில் இருக்கிறது. இந்த தேசத்தைக் காப்பாற்றும்போது அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பால் அவர்களது குடும்பத்தினர் எப்படி உணருவார்கள் என்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். இது எனக்கு ஒரு உணர்ச்சிப் பிரச்சினை." எனக் குறிப்பிட்டு மன்னிப்பு கோரினார்.
இதையடுத்து நடிகர் அக்ஷய் குமார் இது தொடர்பாக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பது, "இதைப் பார்க்கையில் மிகுந்த வருத்தமளிக்கிறது. நமது ஆயுதப் படைகளுக்கு அவமானம் விளைவிக்கும் வகையில் எதையும் நாம் செய்யக்கூடாது. அவர்களால் தான் நாம் இங்கு இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Hurts to see this. Nothing ever should make us ungrateful towards our armed forces. Woh hain toh aaj hum hain. 🙏 pic.twitter.com/inCm392hIH— Akshay Kumar (@akshaykumar) November 24, 2022