முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக ரேஷ்மி சிம்ஹா தயாரிப்பில் நடிகர் சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வசந்த முல்லை'. அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக கஷ்மீரா பர்தேசி நடிக்க ஆர்யா மற்றும் ராக்ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வருகிற 10 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹா பேசுகையில், ''நீண்ட நாட்கள் கழித்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன். வெற்றி பெற்றிருக்கும்போது ஏராளமான வாய்ப்புகளும் நிறைய நண்பர்களும் உடனிருப்பார்கள். ஆனால், வெற்றிக்காக காத்திருக்கும்போது நம் மீது நம்பிக்கை வைத்து பயணிப்பவர்கள் குறைவு. அந்த வகையில் தயாரிப்பாளர் ராம் எங்கள் மீது நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கை இன்று வரை குறையவில்லை. தெலுங்கில் சிரஞ்சீவி சார், கன்னடத்தில் சிவராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்களின் மூலம் வெளியிட்டோம். ஆனால், தமிழில் பத்திரிகையாளர்களாகிய உங்கள் முன் வெளியிடுகிறோம். படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஆர்யாவிடம் கேட்டபோது மறுக்காமல் உடனே ஒப்புக்கொண்டார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் ரமணன் புருஷோத்தமா பேசுகையில், ''முகநூல் மூலமாக சிம்ஹா என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு அவரை சந்தித்தேன். ஏதாவது கதைகளை வைத்திருக்கிறீர்களா? நாம் இணைந்து பணியாற்றலாமா? எனக் கேட்டார். அன்று அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான் இன்று எனக்கு கிடைத்திருக்கும் இந்த முதல் மேடை. இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் பணிகளை தொடங்குவதற்கு ரேஷ்மி சிம்ஹா, ராம் தல்லூரி, ரஜினி தல்லூரி ஆகியோர் அளித்த நம்பிக்கையான வாக்குறுதியும் ஒரு காரணம்.
'வசந்த முல்லை' எனும் படத்தின் திரைக்கதையின் போக்கில் ஒரு திருப்புமுனைக்குப் பிறகு, இந்த கதை ஒரே இரவில் நடைபெறும். மலைப்பாங்கான பகுதி; இருட்டு; தொடர் மழை... இந்த பின்னணியில் நடிகர், நடிகைகளின் ஒத்துழைப்பு வியப்பை அளித்தது. அதிலும் குறிப்பாக நாயகி கஷ்மீரா பர்தேசி அந்த குளிரில் ஒவ்வொரு காட்சியிலும் ஈரம் சொட்ட சொட்ட நனைந்து நடிக்க வேண்டியதிருந்தது. முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை அளித்த நாயகி கஷ்மீரா பர்தேசிக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.