கன்னட சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் ஏழைகளுக்கு அவர் செய்த பங்களிப்பையும் போற்றும் விதமாக கர்நாடக அரசாங்கம் கர்நாடக ரத்னா விருது வழங்கியது.
இதனிடையே புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிறகு சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மைசூர் சாலையில் உள்ள நாயண்டஹள்ளி சந்திப்பு மற்றும் பன்னர்கட்டா சாலையில் உள்ள வேகா சிட்டி மால் இடையேயான 12 கி.மீ. தூர சாலைக்கு புனித் ராஜ்குமாரின் பெயரை சூட்டியுள்ளது.
இந்த நிகழ்வில் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் அஸ்வினி புனித் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு அஸ்வினி புனித் ராஜ்குமார் சமூக ஊடகங்கள் வாயிலாக கர்நாடக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். புனித் ராஜ்குமாரை பல்வேறு வழிகளில் வாழ வைத்ததற்காக மாநில அரசு, கர்நாடகா ஃபிலிம் சேம்பர், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் கடன்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.