தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை (01.03.2023) இன்று கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில் மகேஷ், தயாநிதி மாறன் எம்.பி, நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, நடிகர் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், "மக்களின் முதல்வரே, கலைஞரின் புதல்வரே... என அப்படியெல்லாம் எனக்கு பேச தெரியாது. எதார்த்தமாக தான் பேசுவேன். திக்கி திக்கி தான் பேசுவேன். இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ-க்கு என்னா வேலை என ஒரு பழமொழி இருக்கு. அந்த ஈ தான் நான். இங்கு இருப்பவர்கள் எல்லாமே சமூக சிந்தனையாளர்கள், சமூக பேச்சாளர்கள். இவங்க மத்தியில் பேச சொன்னா என்னத்த பேசுறது. நமக்கு 2 படிக்கட்டு ஏறினாலே மூச்சு வாங்குது. நம்ம முதல்வர் 50 வருஷம் அரசியல் நடத்திக்கிட்டு தலைமை போன பின்பு கட்சியை நடத்திகிட்டு, மக்கள் பணியாற்றி அனைவரையும் கைகோர்த்துட்டு அழைத்து செல்கிறார். அது சாதாரணமான விஷயம் இல்லை. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வரவில்லை. அவரிடம் ஆசீர்வாதம் வாங்க தான் வந்திருக்கிறேன்.
இந்தியாவில் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றாலே அவர்களை அம்பானி என்று சொல்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி கிடையாது. அம்பானிக்கு மேல் ஒருத்தவங்க இருக்காங்க. அது நம்ம தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன். அவர்களது உழைப்பு கடினமானது. கரு.பழனியப்பன் நிறைய புத்தகம் படிப்பார் போல. ஏனென்றால் நாங்க எல்லாம் படிக்கவில்லை. படிச்சிருந்தா கொஞ்சம் அறிவு இருந்திருக்கும். நமக்கு அறிவும் கம்மி, உயரமும் கம்மி." என நகைச்சுவையாக பேசினார்.
மேலும், "அடுத்து அன்பில் மகேஷ் அண்ணன், இன்றைக்கு தமிழ்நாட்டில் கல்வி தரம் உயர்ந்து கொண்டு வருகிறது. அதற்கு காரணம் அவர் தான். அவரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாங்கள் எல்லாம் மாநகராட்சி பள்ளிகளில் தான் படித்தோம். மாநகராட்சி என்றாலே ப்ரோஃபைல் கம்மியாக இருக்கும். அதற்காக நிறைய பேர் ஃபீல் பண்றாங்க. அதனால் மாநகராட்சியை தமிழ்நாடு என்று பெயர் மாற்றினால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். மேலும் மாநகராட்சியில் 8 கோடி மக்களில் 50 லட்சம் பேர் தான் படிப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் இலவச கல்வி திட்டத்தை நீங்க பண்ண வேண்டும் என கேட்டு கொள்கிறேன். நீங்க ஒரு பட்ஜெட் போட்டு கொடுத்தீங்கனா... முதல்வர் உடனே கையெழுத்து போட்டு விடுவார்.
அண்ணன் சேகர் பாபுவை பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். அவரது நடவடிக்கைகளை தினசரி பேப்பரில் பார்க்கலாம். திமுகவில் சொல்வார்கள் சாமி பக்தி இல்லை, சாமி இல்லை என்று. அதெல்லாம் பொய். எங்க அண்ணனை பாருங்க... நிறைய கோவிலில் அன்னதானம் செய்கிறார். மதச்சார்பின்மையை நிறைவேற்ற முயற்சித்து வருகிறார்" என்றார்.