தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இதனிடையே இந்தியில், 'மிஷன் மஜ்னு', 'அனிமல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் நடிக்கவுள்ளார்.
ராஷ்மிகா நீண்ட நாட்களாக சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக வரும் வதந்திகள் குறித்தும், திரைத்துறை பயணம் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த சில மாதங்களாக ஏன், சில வருடங்களாக சில விஷயங்கள் என்னை வருத்தமடையச் செய்தது. அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டும் சரியான நேரம் இது என நினைக்கிறேன். நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன்.. இதனை நான் சில வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இருப்பினும் இப்போது சொல்கிறேன்.
நான் என் திரைப் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்பைச் சம்பாதித்து வருகிறேன். நிறைய எதிர் மறையான விமர்சனங்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறேன். நான் தேர்வு செய்த இந்தப் பயணம் மிகவும் சிக்கலானது என்பது எனக்குத் தெரியும். அனைவராலும் ரசிக்கப்படும் நபராக இருக்க முடியாது என்றும் தெரியும், அதற்காக விமர்சிப்பது சரியல்ல. பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லலாம் அதில் தவறில்லை.
உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதற்காக நான் எவ்வளவு முயற்சி செய்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என் வேலையின் மூலம் உங்களை மகிழ்விப்பதில் மிகவும் அக்கறை காட்டுகிறேன். நீங்களும் நானும் பெருமைப்படக்கூடிய விஷயங்களை முடிந்தவரை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். குறிப்பாக நான் சொல்லாத விஷயங்களுக்காக இணையத்தில் கேலி செய்யப்படுவதும், மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குகிறது. மேலும் திரைத்துறையில் உள்ளவருடனும் வெளியில் உள்ளவருடனும் இருக்கும் உறவைப் பிளவுபடுத்தும் வகையில் அந்தத் தவறான செய்திகள் அமைகிறது.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அது என்னை மேம்படுத்திச் சிறப்பாகச் செய்யத் தூண்டும். ஆனால் மோசமான எதிர்மறை மற்றும் வெறுப்புடன் வரும் விமர்சனத்தில் என்ன இருக்கிறது?. நீண்ட காலமாக நான் அதைத் தவிர்த்து வருகிறேன். ஆனால் அது இப்போது இன்னும் அதிகரிப்பதால் அதனை விளக்குகிறேன்.
என் மீதுள்ள தவறைச் சுட்டிக்காட்டினால், உங்களிடமிருந்து நான் பெறும் அன்பையும் அடையாளத்தையும் ஒப்புக்கொள்கிறேன். உங்களின் நிலையான அன்பும் ஆதரவும்தான் என்னைத் தொடர வைத்தது. வெளியே வந்து இதைச் சொல்ல எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது. என்னைச் சுற்றியிருக்கும் அனைவரிடமும், இதுவரை நான் பணியாற்றியவர்களிடமும், நான் எப்போதும் ரசித்த அனைவரிடமும் மட்டுமே எனக்கு அன்பு கிடைத்தது. அதனால் அவர்களுக்காகத் தொடர்ந்து கடினமாக உழைப்பேன். ஏனென்றால் உங்களை மகிழ்விப்பதில் எனக்கு மகிழ்ச்சி" என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.