நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஏஐ டீப் ஃபேக் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், இதற்குப் பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
போலி வீடியோ தொடர்பாகச் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமல்லாது ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர் தான் முதலில் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்து பின்னர் மற்ற தளங்களில் பரவலாகப் பகிர்ந்துள்ளார் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.