நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகை ராஷ்மிகா கரோனா முன்கள பணியாளர்கள் குறித்து வீடியோ வெளியிட்டுப் பேசியுள்ளார். அதில்..
"நம்ப முடியாத, எதுவும் கணிக்க முடியாத இந்த காலகட்டத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கோவிட் நாம் நினைத்துப் பார்க்காத வழிகளில் நமக்குச் சவால் விடுகிறது. இது போன்ற ஒரு விஷயத்திற்கு நாம் தயாராக இல்லை. நம் அன்றாட வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், அதோடு கவலை, நிச்சயமற்ற தன்மையும் சேர்ந்து, உங்களில் பலருக்கும், எனக்கும் கூட கையாளமுடியாத படி இருக்கிறது. இது மீண்டும் நடக்கிறது என்ற உண்மையை ஜீரணிக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது. ஆனால் இது போன்ற நேரங்களில் நேர்மறையான மன ஓட்டத்துடன் இருப்பதே இந்த போரை வெல்வதற்கான பாதையில் நம்மைச் செலுத்தும் என்பதை நான் உணர்ந்தேன்.
இந்த நிலையில் அடுத்த சில வாரங்களுக்கு, அசாதாரண விஷயங்களைச் செய்யும் நம் சாதாரண ஹீரோக்களின் சில கதைகளை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். இவை எனக்கு நம்பிக்கையைத் தந்தது. என்னைப் புன்னகைக்க வைத்தது. மேலும் இதுபோன்ற ஒன்றை எதிர்த்துப் போராடும் போது நம்மிடையே மொழி, நாம் எங்கிருந்து வருகிறோம் என எந்தத் தடையும் இல்லை என்பதை இந்தக் காலகட்டம் உணர்த்தியுள்ளது. இது எனக்கு மிகவும் பெருமையைத் தருகிறது. உங்களைப் புன்னகைக்க வைக்க, உங்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கையைத் தர நான் இதைச் செய்கிறேன். இந்த நாயகர்களுக்குத் தனிப்பட்ட முறையில் என் நன்றி. நாம் இதை வெல்வோம்” என்றார்.