கடந்த நவம்பர் மாதம் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்குப் பல்வேறு பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஷ்மிகாவும் மன வேதனை அடைந்ததாகத் தெரிவித்திருந்தார். பின்பு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை, போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமல்லாது ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்பு வீடியோ வெளியிட்ட முக்கிய குற்றவாளியை கைது செய்ததாக சமீபத்தில் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த டீப் ஃபேக் விவகாரம் குறித்து ஊடகம் ஒன்றில் ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். அவர் பேசுகையில், “பலமுறை இது நடந்திருக்கிறது. அதைப் பற்றி பேசினால், நீங்கள் இந்த துறையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள், இது இப்படித்தான் இருக்கும். இது உங்களுக்கும் தெரியும். அப்படி இருக்கையில் இப்போது ஏன் சொல்கிறீர்கள் என பேசுகிறார்கள்.
ஆனால் இதுவே நான் கல்லூரியில் படிக்கும் போது நடந்திருந்தால், எனக்கு ஆதரவாக யாரும் வரமாட்டார்கள். இதைத்தான் நான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். ஏனெனில் சமூகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறதோ அதுவே நாமாக இருக்க வேண்டும் என்பது நமது கலாச்சாரத்தில் ஒன்று. சமூகம் நம்மை எப்படி விரும்புகிறதோ, அப்படி நாம் இருக்க வேண்டும். அது உங்களுக்குத் தெரியும். அதனால் சிந்தித்து எதிர்வினையாற்றுவது சரி.
நினைத்து பாருங்கள், ஒரு கல்லூரியில் ஒரு பெண்ணுக்கு இப்படி ஆகும்போது எப்படி இருக்கும். அந்த பெண்ணை பற்றி மிகவும் பயம் வருகிறது. அதனால் இதைப் பற்றி நான் பேசினால், குறைந்தபட்சம் 41 மில்லியன் மக்களுக்காவது டீப் ஃபேக் என்றால் என்ன? அது சரியானது அல்ல, அது பொதுவாக மக்களுக்கு அவர்களது உணர்வுகளை பாதித்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என தெரிய வரும். எனவே அந்த விழிப்புணர்வை வெளிக்கொண்டு வருவது முக்கியமாக பார்க்கிறேன்” என்றார்.