தமிழில் சிம்புவின் குத்து படம் மூலம் அறிமுகமான நடிகை ரம்யா, தொடர்ந்து கிரி, வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். திவ்யா ஸ்பந்தனா என்ற பெயர் கொண்ட இவர் திரையில் ரம்யா என்ற பெயரை பயன்படுத்தி பின்னர் தனது பெயரிலேயே நடித்து வந்தார்.
கன்னடத்தைச் சேர்ந்த இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த 2012ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர், 2013 ஆம் ஆண்டு மண்டியா மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பிறகு அரசியலில் அதிக கவனம் செலுத்தி வந்த ரம்யா 2016க்குப் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ரோஹித் பதகியின் 'உத்தரகாண்டா' என்ற கன்னடம் படம் மூலம் மீண்டும் திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கயிருந்தார் ரம்யா. படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான ரம்யா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்த பின்பு அவர் நலமுடன் இருப்பதாகவும், இறந்ததாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டன.
மேலும் அவர் தற்போது சுவிட்சர்லாந்தில் இருப்பதாகத் தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை அவரது தோழியும் பத்திரிகையாளருமான சித்ரா சுப்ரமணியம் என்பவர் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு கீழ் ‘விரைவில் நம்ம ஊரில் சந்திப்போம்’ என நடிகை ரம்யா கமெண்ட் செய்துள்ளார்.