![ajith vijay fans joined for varunika sree child medical treatment](http://image.nakkheeran.in/cdn/farfuture/-8ygFHh6gcS9NCUnZR5I7Q7MWMClGOwLEdZ_Tbo45vs/1738845418/sites/default/files/inline-images/287_15.jpg)
அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள விடாமுயற்சி படம் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருவொற்றியூரில் ஒரு திரையரங்கில் ஒரு குழந்தையின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் முயற்சியில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
திருவாரூரைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அக்குழந்தை அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை குணப்படுத்த 16 கோடி ரூபாய் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இன்று வெளியாகியுள்ள விடாமுயற்சி பட டிக்கெட்டில் குழந்தை தொடர்பான செய்தியை அச்சிட்டு ரசிகர்களுக்கு வழங்கி, நிதி திரட்டி வருகின்றனர். இந்த முன்னெடுப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்த முன்னெடுப்பு தொடர்பாக அக்குழந்தையின் தாயார் பேசுகையில், “என் பெயர் சௌந்தர்யா. நாங்கள் திருவாரூர் நன்னிலம் ஊரில் இருந்து வந்திருக்கிறோம். என்னுடைய குழந்தை வருணிகா ஸ்ரீ பிறந்து ஆறு மாதம்தான் ஆகிறது. ஆனால் Spinal Muscular Atrophy என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை மக்களிடம் கொண்டு வந்து நிதி திரட்டி வருகிறோம். மக்கள் கொடுக்கும் நிதியால் மற்றும் ஆதரவால் மட்டுமே என்னுடைய குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்ற முடியும். இந்தக் குழந்தையால் நேரடியாக பால் குடிக்க முடியாது. ட்யூப் வழியாகத்தான் இரண்டு மாதமாக பால் கொடுத்து வருகிறோம்.
குழந்தையை பாதுகாக்க ரொம்ப சிரமமாக இருக்கிறது. அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். இந்த முயற்சியை எடுத்ததற்காக திருவொற்றியூர் அஜித் ரசிகர்கள் மற்றும் கன்னியாகுமரி விஜய்யின் த.வெ.க. கட்சியினர்களுக்கு நன்றி. இந்த முயற்சியால் தமிழ்நாடு முழுவதும் என் குழந்தையின் செய்தி பரவி எல்லா மாவட்டத்திலும் இருந்து எங்களுக்கு ஆதரவு வர வேண்டும்” என கண்ணீர் மல்க பேசினார்.