கற்பனை கதாபாத்திரங்களான சூப்பர் ஹீரோக்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கென்றே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் ஸ்பைடர் மேன் படத்திற்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்'. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் உச்சம் தொட்டு பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இப்படத்தை தொடர்ச்சியாக 292 முறை பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ராமிரோ அலானிஸ் என்ற இளைஞர், 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை 292 முறை தொடர்ச்சியாக பார்த்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ராமிரோ அலானிஸ் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்தை 191 முறை பார்த்து சாதனை படைத்திருந்தார். ஆனால் இந்த சாதனையை ஆர்ட் க்லீன் என்ற இளைஞர் 'காமெலோட்; ஃபர்ஸ்ட் இன்ஸ்டால்மென்ட்' படத்தை 209 முறை பார்த்து முறியடித்திருந்த நிலையில் தற்போது ராமிரோ அலானிஸ் 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' படத்தை 292 முறை பார்த்து தனது கின்னஸ் சாதனையை மீட்டுள்ளார்.