![rajnikant](http://image.nakkheeran.in/cdn/farfuture/hQaClK6N8ZB38LoxOrEcVyvwz_YDEbzGY7S7ubmLtl0/1595399992/sites/default/files/inline-images/rajnikanth_13.jpg)
சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சகஜம்தான் சில நேரங்களில் அது சமூக ஊடகங்களைக் கடந்து வழக்குகளாகவும் போராட்டங்களாகவும் உருவெடுப்பதும் உண்டு. அதுவும் இந்தக் கரோனா காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான சமூக ஊடகப் பயன்பாடு இருக்கிறது. அதை யூ-ட்யூபர்களும், சோஷியல் மீடியா பிரபலங்களும் நன்றாகப் பயன்படுத்துகின்றனர். லேட்டஸ்ட் சர்ச்சையாக ‘கந்த சஷ்டி’ கவசம் குறித்த வீடியோவும், இன்னொருவர் வரைந்த கார்ட்டூனும் பல விவாதங்களை எழுப்பி வருகின்றன. பொதுவாக சினிமா பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களில் எந்தச் சார்பும் எடுக்காமல் ஒதுங்கிக்கொள்வார்கள். வெகுசிலரே கருத்துத் தெரிவிப்பார்கள். ஆனால், இந்த விவகாரத்திற்கு குறிப்பிட்ட அளவிலான பிரபலங்கள் தங்களின் கண்டனத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
தற்போது இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட அந்த வீடியோவும் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசைப் பாராட்டி ட்விட்டரில், “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!” என்று ரஜினி தெரிவித்துள்ளார்.