கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (22/07/2022) டெல்லியில் இந்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டன. இதில் 'சூரரைப் போற்று' படம் ஐந்து விருதுகளும், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் மூன்று விருதுகளும், 'மண்டேலா' படம் இரண்டு விருதுகளும் வென்றுள்ளன. இந்த ஆண்டு மொத்தம் பத்து தேசிய விருதுகள் பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த கலைஞர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தேசிய விருது வென்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.
சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.— Kamal Haasan (@ikamalhaasan) July 23, 2022