ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி அதில் ஹீரோவாக நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான படம் 'பாபா'. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க ரஜினியே தயாரித்தும் இருந்தார். மனிஷா கொய்ராலா, நம்பியார், விஜயகுமார், கவுண்டமணி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் 'பாபா' படம் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீசாகவுள்ளது. நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ள இப்படத்தில் புதிதாக சில காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் டிஜிட்டல் முறையில் மெருகேற்றும் பணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் படத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு ரஜினி டப்பிங் பேசி முடித்தார் . மேலும் ரீ ரிலீசுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டுள்ள 'பாபா' படத்தின் புதிய ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், "என்றென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு திரைப்படம். பாபா ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பு விரைவில் வெளியிடப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.