Skip to main content

“துரைமுருகன் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது” - ரஜினிகாந்த்

Published on 26/08/2024 | Edited on 26/08/2024
rajini replied to durai murugan

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட  நிலையில் சிறப்பு விருந்தினராக ரஜினியும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “பள்ளி ஆசியர்களுக்கு புதிய மாணவர்கள் பிரச்சினையே இல்லை, பழைய மாணவர்களை சமாளிப்பதுதான் பிரச்சினை. இங்கு அப்படி பலர் உள்ளனர். அவர்கள் எல்லாம் நல்ல ரேங்க் எடுத்தும் கிளாஸைவிட்டு செல்லமாட்டோம் என உட்கார்ந்து கொண்டு உள்ளனர். அவர்களை சமாளிப்பது கடினம். 

இங்கு துரைமுருகன் என்று ஒருவர் உள்ளார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டியவர். அவரிடம் ஒரு விஷயத்தை செய்கிறோம் அண்ணே என்றால், அப்படியா சந்தோஷம் என்பார். அதை மகிழ்ச்சியாக சொல்கிறாரா, என்னடா இப்டி பன்றீங்கண்ணு சந்தோஷம்னு சொல்கிறாரா? எனப் புரியாது” என்றார். இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் ரஜினி பேசியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதே மாதிரிதாங்க. மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்த்து நடிக்கின்றனர். வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதையெல்லாம் மறந்துட்டு ஏதோ ஒண்ணு பேசுறாரு” எனப் பதிலளித்திருந்தார். 

இந்த நிலையில் துரைமுருகன் பதிலுக்கு ரஜினிகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதுமே தொடரும்” என்று கூறியுள்ளார்.    

சார்ந்த செய்திகள்