இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.