'தர்மதுரை' படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக நடித்து அவரது சட்டையை பிடித்து இழுக்கும் வில்லன் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகர் ரகு. தற்போது சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', 'பரியேறும் பெருமாள்', 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தன் சினிமா வாழ்க்கை குறித்து பேசும்போது..."தர்மதுரை' படத்தில் என்னை தவிர மற்ற அனைவரும் மிகப்பெரிய ஜாம்பவான்கள். நான் மட்டும் தான் புது ஆள். அதிலும் முதல் காட்சியே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து சண்டைபோடும் காட்சி என்பதால் பதட்டமாக இருந்தது. மேலும் ஆரம்பத்தில் அந்த காட்சி காமெடியாக இருந்தாலும் க்ளைமாக்சில் சேது அண்ணாவையே தாக்கும் அந்த வில்லத்தனம் தான் என்னை ரசிகர்களிடம் ஓரளவுக்கு அறிமுகம் செய்துவைத்தது. சேது அண்ணா தான் "பயப்படாம அடி" என ஊக்கம் கொடுத்தார். இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சீனுராமசாமி சாருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
ரஜினி முருகன் படத்திலேயே நான் நடிக்கவேண்டியது. ஆனால் ரொம்ப சின்ன ரோல் என்பதால், உனக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என கூறிய பொன்ராம் தான் சொன்னபடி 'சீமராஜா' படத்திற்காக அழைத்து 'நீ ஒல்லியாக இருக்கிறாய் இந்த கேரக்டருக்கு நன்றாக உடம்பை ஏற்றவேண்டும். அப்படி வந்தால்தான் உனக்கு வாய்ப்பு' என கண்டிஷன் போட்டுவிட்டார். அதற்காக நான் ஜிம், உடற்பயிற்சி என உடம்பை ஏற்றி, சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ஆளே மாறியதை பார்த்து இயக்குனர் பொன்ராம் ரொம்பவே சந்தோஷப்பட்டார். சீமராஜா படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளேன்" என்றார்.