கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் கரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுத்த ராகவா லாரன்ஸ், பிறகு மீண்டும் 25 லட்ச ரூபாயைத் தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்தார். இதையடுத்து சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண உதவி அளித்த ராகவா லாரன்ஸ் திருநங்கைகள் தினத்தையொட்டி அவர்களுக்கு வாழ்த்து கூறி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
''உங்களின் அன்பையும் பாசத்தையும் உணர்ந்த உங்கள் 'லாரன்ஸின்' அன்பான திருநங்கையர் தின வாழ்த்துக்கள். உங்களுக்காக ஒரு 'காஞ்சனாவை' நான் உருவாக்கியது அந்த இறைவனின் அருள். அடுத்த திருநங்கையர் தினத்தில் நிச்சயம் ஊரோடு சேர்ந்து உங்களுக்கான அருமையான திருநங்கையர் இல்லத்தை உருவாக்கிட மீண்டும் இறைவனிடம் கேட்டிருக்கிறேன். நிச்சயம் நடக்கும். இத்தினத்தில் உலக மக்களை நீங்கள் மனதார ஆசிர்வதியுங்கள். அது மிக அவசியம்'' எனக் கூறியுள்ளார்.