கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் கரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுத்த ராகவா லாரன்ஸ், பிறகு மீண்டும் 25 லட்ச ரூபாயைத் தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்தார். இதையடுத்து சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்சமும், சங்கத்திற்கு 25 லட்சமும் நிதியுதவி அளித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். இதற்கிடையே சமீபத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த டாக்டர் ஜெயமோகன் பெயரால் எதிர்காலத்தில் மருத்துவச் சேவைகளுக்கான முன்னெடுப்பை மேற்கொள்ளவிருப்பதாக நேற்று அறிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ் வேலையில்லாமல் கஷ்டப்படும் நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு உதவுவதாகச் சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
நடிகர் தீப்பெட்டி கணேசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அஜித் தனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், இந்தச் செய்தியைத் தயவுசெய்து அவரிடம் சேர்த்து விடுங்கள் என்று கண்ணீருடன் பேசிய வீடியோ தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த விடியோவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ்... ''ஹாய் தம்பி, இப்போதுதான் என் நண்பர் இந்த வீடியோவை எனக்குப் பகிர்ந்தார். இந்த வீடியோவை நிச்சயம் அஜித் சார் மேலாளரிடம் சேர்த்துவிடுகிறேன். அது அஜித் சாரிடம் போய்ச் சேர்ந்துவிட்டால், அவர் நிச்சயமாக உதவுவார். அவர் மிகவும் கனிவான மனிதர். உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு உதவ நான் எனது பங்கையும் செய்கிறேன். தயவுசெய்து உங்கள் தொடர்பு விவரங்களை எனக்குப் பகிருங்கள்'' எனச் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.