உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவே முடங்கியுள்ள நிலையில், தினக்கூலி பணியாளர்கள் வருமானமின்றி, அத்தியாவசியப் பொருட்களுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன. இதையடுத்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் ஆகியோர் கஷ்டப்படும் குடும்பங்களுக்காக உதவி வரும் நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ரூபாய் 3 கோடியை கரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்கினார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் 'தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்த அனைவரும், ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என அரசு தடை விதித்ததை நடிகர் ராகவா லாரன்ஸ் மறுபரிசீலனை செய்ய நேற்று வேண்டுகோள் விடுத்த நிலையில், தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை விதிக்கவில்லை என்று தமிழக அரசு தற்போது விளக்கமளித்துள்ளது. தமிழக அரசு மாற்றியுள்ள முடிவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சமூகவலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில்...
''கரோனா ஊரடங்கில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுவதில் தன்னார்வலர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது. இந்த நல்ல அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கும், அதைப் பற்றித் தெளிவாக, நடைமுறை விளக்கம் தந்த காவல்துறை ஆணையருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அரசைப் பொறுத்தவரை மக்களுக்கு கரோனா வைரஸ் பரவாமலும் தடுக்க வேண்டும், அதேநேரம் மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பெரும் இக்கட்டான நிலை உள்ளது!
ஆகவே, தமிழக அரசினால் அறிவுறுத்திச் சொல்லப்படும் சமூக விலகலைக் கண்டிப்பாகப் பின்பற்றி, தன்னார்வலர்களும், என்னுடைய ரசிகர்கள் மற்றும் திருநங்கைகள், அபிமானிகள் உள்பட அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது! நாம் மக்களுடைய பசிப்பிணியையும் போக்க வேண்டும். அதே சமயம் கரோனா வைரஸ் பரவாமலும் அரசின் அறிவுரைப்படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், இயலாத மக்களுக்கு இயன்றவரை உதவிடுங்கள். நானும் நமது தமிழக அரசின் சமூக விலகல் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து, என்னால் முடிந்தவரை உதவி வருகிறேன். அதைப்போலவே அனைவரும் உதவிடுவோம். கரோனாவை வென்றிடுவோம்! அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக அவர் வாங்கும் சம்பளத்திலிருந்து ரூபாய் 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.