கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சமீபத்தில் கரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுத்த ராகவா லாரன்ஸ், பிறகு மீண்டும் 25 லட்ச ரூபாயைத் தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்தார். அதன் பிறகு சினிமா விநியோகஸ்தர்களுக்கு 15 லட்சமும், நடிகர் சங்கத்திற்கு 25 லட்சமும், கரோனா ஊரடங்கினால் அவதிப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு தலைக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கியுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயாரின் உடலை அடக்கம் செய்வது குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
''மாண்புமிகு கேரள முதல்வருக்கு வணக்கங்கள். கரோனா தொற்று மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து தாங்கள் செய்துவரும் அரும்பணியைக் கண்டு வியக்கிறேன். ஒருமுறை எனது தாயாருடன் தங்களைச் சந்தித்து நிவாரணத்தொகை வழங்கியதையும் பெருமையாகக் கருதுகிறேன். ஒரு சிறிய வேண்டுகோளைத் தங்களிடம் முன்வைக்கிறேன். திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, நேற்று மாலை மருத்துவமனையிலேயே உயிரிழந்த நிலையில், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து, தமிழகத்தில் கன்னியாகுமரி சுசீந்திரம் பகுதிக்கு எடுத்துச்செல்ல வேண்டும். கரோனாவால் அவரால் மருத்துவமனைக்குச் செலுத்தவேண்டிய ஒன்றரை லட்சம் பணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கிறார். அசோக் என்பவர் தாயை இழந்து கதறுவது குறித்து, மூத்த பத்திரிகையாளர் கொ.அன்புகுமார் அவர்களின் மூலம் எனது உதவியாளர் புவனிடம் இருந்து சம்ந்தபட்ட நபரின் ஆடியோவை கேட்டு மிகுந்த துயருற்றேன். உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோளாக அவரது தாயாரின் உடலை மருத்துவமனையிலிருந்து தமிழகம் எடுத்துச்செல்ல உடனடியாகத் தாங்கள் அனுமதிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன். மருத்துவமனைக்குச் செலுத்தவேண்டிய பணத்தை ஓரிரு நாளில் நானே செலுத்திவிடுகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன். நன்றி!!
தங்கள் அன்புள்ள ,
ராகவா லாரன்ஸ்.''
என வேண்டுகோள் விடுத்துள்ளார்.