கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் கரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுத்த ராகவா லாரன்ஸ், பிறகு மீண்டும் 25 லட்ச ரூபாயைத் தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்தார். இதையடுத்து சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண உதவி அளித்த ராகவா லாரன்ஸ் நேற்று நடிகர் சங்கத்திற்கு 25 லட்சம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே நடிகர் ராகவா லாரன்ஸ் நிதியுதவிகள் கொடுப்பதாக அறிவிப்பதோடு சரி, ஆனால் அவர் அறிவித்த பணத்தை உண்மையிலேயே கொடுத்தாரா? இல்லையா? எனப் பல்வேறு தரப்பிலிருந்து சமீபகாலமாகச் சந்தேகக் கேள்விகள் எழுந்துவரும் நிலையில் லாரன்ஸ் நேற்று நடிகர் சங்கத்திற்கு கொடுத்த 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஆதாரமாகத் தற்போது வெளியிட்டு கூடவே அறிக்கையும் ஒன்றையும் லாரன்ஸ் தரப்பில் வெளியிட்டுள்ளார்கள். அதில்....
''அன்புள்ள ஊடக நண்பர்களுக்கு,
வணக்கம்
இந்த இக்கட்டான சூழலில், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் கரோனா நிவாரண நிதி வழங்கியிருக்கும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்சுக்கு நடிகர் உதயா மனதார நன்றி தெரிவித்திருக்கிறார். அரசு நியமித்த சிறப்பு அதிகாரி வசம் இந்தக் காசோலை சேர்ப்பிக்கப்படும். படப்பிடிப்பு வேலைகளின்றி தவித்து வரும் கலைஞர்களுக்கு, இதனைச் சிறப்பு அதிகாரி தேவையறிந்து விநியோகிப்பார். உங்கள் மேலானப் பார்வைக்காக அந்தக் காசோலையின் நகலும் இணைத்துள்ளேன்.
நன்றி'' எனக் குறிப்பிட்டுள்ளனர்.