உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவே முடங்கியுள்ள நிலையில், தினக்கூலி பணியாளர்கள் வருமானமின்றி, அத்தியாவசியப் பொருட்களுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன. இதையடுத்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் ஆகியோர் கஷ்டப்படும் குடும்பங்களுக்காக உதவி செய்துவரும் நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ரூபாய் 3 கோடியை கரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்கினார்.
இதையடுத்து, தான் கொடுத்த இந்த நன்கொடைக்குப் பிறகு ஸ்டன்ட் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் பலர் இன்னும் உதவிகள் செய்யுமாறு தன்னிடன் கேட்டுக்கொண்டதாகவும், மேலும் பொதுமக்களிடம் இருந்தும் கடிதங்கள், வீடியோக்கள் வந்துள்ளதால், தான் கொடுத்த 3 கோடி ரூபாய் போதாது என எண்ணிய ராகவா லாரன்ஸ் தன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பதாக இன்று காலை அறிவித்திருந்தார்.
அதன்படி ராகவா லாரன்ஸ் இந்த அறிவிப்பு குறித்து தற்போது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம். இன்று மாலை 5 மணிக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுவேன் என்று இன்று காலை பதிவிட்டேன். அதன்படி எனது யோசனைகளை ஆடிட்டரிடம் விவாதித்தேன். அவரோ யோசனைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்று பகுப்பாய்வு செய்ய 2 நாட்கள் அவகாசம் கேட்டார். எனவே வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று இதுகுறித்த அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளேன்'' என கூறியுள்ளார்.