இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் ராஜாகண்ணு என்பவரை காவல்துறையினர் திருட்டு வழக்கில் கைது செய்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அடித்து துன்புறுத்துகையில் அவர் சிறையிலேயே மரணமடைவார். அதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்திய அவர் மனைவி, தன்னுடைய கணவரின் இறப்பிற்கு காரணமான காவல் அதிகாரிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பார். அந்நிகழ்வின் உண்மை தன்மை மாறாமல் படத்தை இயக்கியதற்காக இயக்குநருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவிக்கு உதவவுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "செய்யாத குற்றத்திற்காக சித்திரவதைக்குட்பட்டு கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கை நிலையை அறிந்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. பார்வதி அம்மாவுக்கு எனது சொந்த செலவில் வீடு கட்டித் தருகிறேன். 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூரமான துயர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய் பீம் படக்குழுவினருக்கும், ஜெய் பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா, ஜோதிகா, இயக்குநர் தா.செ ஞானவேல் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளும் நன்றியும் " என குறிப்பிட்டுள்ளார்.
A house for Rajakannu’s family 🙏🏼 #JaiBhim #Suriya @Suriya_offl @2D_ENTPVTLTD @rajsekarpandian @tjgnan @jbismi14 @valaipechu pic.twitter.com/nJRWHMPeJo
— Raghava Lawrence (@offl_Lawrence) November 8, 2021