கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் கரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுத்த ராகவா லாரன்ஸ், பிறகு மீண்டும் 25 லட்ச ரூபாயைத் தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்தார். இதையடுத்து சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்சமும், சங்கத்திற்கு 25 லட்சமும் நிதியுதவி அளித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இதற்கிடையே கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெயமோகன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்ட மலைப் பகுதியில் உள்ள தெங்குமரஹடா எனும் குக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று மருத்துவ உதவிகளைச் செய்து வந்துள்ளார். இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட ஜெயமோகன், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சமூகவலைத்தளத்தில் டாக்டர் ஜெயமோகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...
"மருத்துவர் ஜெயமோகனின் மரணம் எனக்கு மிகுந்த சோகத்தையும், மனவருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் வாழும் மக்களுக்காக ஆத்மார்த்தமாகப் பணியாற்றிய அவரது மனிதநேயத்துக்கு நான் தலைவணங்குகிறேன். இதையும் இதோடு மற்ற சேவைகளையும் செய்ய விரும்புகிற மருத்துவர்களின் உதவியோடு அந்தக் கிராமத்தில் ஜெயமோகனின் பெயரால் எதிர்காலத்தில் மருத்துவச் சேவைகளுக்கான முன்னெடுப்பை மேற்கொள்கிறேன். அவரது ஆன்மாவுக்கு நான் செய்யும் மரியாதை இது" எனப் பதிவிட்டுள்ளார்.