நடிகர் ரஜினிகாந்த் நவம்பரில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக சமீபகாலமாக மீண்டும் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ள நிலையில் இதுகுறித்து நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"தலைவர் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன். கடந்த வாரம் நான் ஒரு ட்வீட் போட்டதும் மீடியா நண்பர்கள் உள்ளிட்ட பலரும், அனைத்து கட்சிகளும் உங்களுக்கு செய்துள்ளது என்றும், நீங்கள் அனைவரையும் மதிப்பதாகவும், ரஜினி கட்சி தொடங்கினால் நீங்கள் அவரை ஆதரிக்கவுள்ளதாகவும், ஏனெனில் மற்றவர்களைத் தவறாகப் பேசும் எதிர்மறை அரசியல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். மேலும் ரஜினியை முதல்வர் வேட்பாளராகவோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் ஒருவரை ஆதரிப்பீர்களா என்றும் கேட்கின்றனர். இன்று நான் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் தலைவர் முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். லீலா பேலஸ் ஹோட்டலில் தனது முடிவை அவர் அறிவித்தபோது, நான் அவரது முடிவை ஆதரித்து ட்வீட் செய்தேன். ஏனென்றால் நான் அவருக்கு எதிராக செயல்பட விரும்பவில்லை. ஆனால் முழு மனதோடு என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் மட்டுமல்ல அனைத்து ரசிகர்களும் அப்படியே உணர்ந்ததாக நினைக்கிறேன்.
ஒவ்வொரு வாரமும் நான் தலைவரிடம் இதைப்பற்றி நான் பேசும்போது கூட அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். எனவே தலைவர் முதல்வர் வேட்பாளராக நின்றால் மட்டுமே நான் அவருக்காக சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன், மற்றவர்களுக்கு அல்ல. அவரை சம்மதிக்க வைக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன். இல்லையென்றால் தொடர்ந்து நான் என்னுடைய சேவையைத் தனிப்பட்ட முறையில் செய்வேன். தலைவர் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்து முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று என்னுடைய பணிவான வேண்டுகோளை வைக்கிறேன். எதிர்காலத்தில் அவர் விரும்பினால் யாரையாவது தேர்வு செய்யட்டும், ஆனால் இப்போது அவரே முதல்வராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதை அவருடைய அனைத்து ரசிகர்களும் வலியுறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் இது நடக்கும் என்று என் மனம் சொல்கிறது. நீங்க வந்தா நாங்க வர்றோம். இப்ப இல்லன்னா எப்போ...
நவம்பர்?" என கூறியுள்ளார்.