சமீபத்தில் ரஜினியின் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் ராகவா லாரன்ஸ் பேசியது பெரும் சர்ச்சையானது. அதனை அடுத்து ரஜினியின் பிறந்தநாள் விழாவில் ராகவா லாரன்ஸ் மறைமுகமாக சீமானை தாக்கி பேசியதும் சர்ச்சையானது.
ரஜினி சொல்லிக்கொடுத்துதான் ராகவா லாரன்ஸ் இவ்வாறு மேடையில் பேசுகிறார் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் லாரன்ஸ். அதில், “என்னுடைய பேச்சும், நான் பதிவிடும் ட்வீட்களும், இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்களும் முழுக்க முழுக்க என்னுடைய சுயசிந்தனைகளே. எதற்கும் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி பொறுப்பு கிடையாது. இப்படியெல்லாம் பேசச் சொல்லி அவர்தான் எனக்கு கற்றுக் கொடுக்கிறார் எனப் பலர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. அவருக்குப் பேச விருப்பமிருந்தால் அதை நிச்சயம் அவரே பேசுவார். தனது செல்வாக்கை ஒருவரிடம் செலுத்தும் நபரல்ல அவர். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட நான் விரும்பவில்லை” என்றார்.
மேலும் ட்விட்டரில், “நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும்! ஒரு சிறிய விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் தலைவரின் அனுமதியின்றி அவரது எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டேன். இதற்குப் பின்னால், நான் பகிர்ந்து கொள்ளவிரும்பாத பல காரணங்கள் உள்ளன. எனக்கு அவரது ஆசிர்வாதம்தான் மிகவும் முக்கியமானது” என்று பதிவிட்டுள்ளார்.