இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிவருகின்றனர்.
ராஜாகண்ணு என்பவரைக் காவல்துறையினர் திருட்டு வழக்கில் கைது செய்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அடித்து துன்புறுத்துகையில் அவர் சிறையிலேயே மரணமடைவார். அதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்திய அவர் மனைவி, தன்னுடைய கணவரின் இறப்பிற்குக் காரணமான காவல் அதிகாரிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பார். அந்நிகழ்வின் உண்மைத் தன்மை மாறாமல் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் த.செ. ஞானவேலை பலரும் பாராட்டினர். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள், தான் மிகவும் வறுமையில் இருப்பதாக தெரிவித்தார். இதனை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாளுக்கு தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் பார்வதி அம்மாள் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார். அங்கு அவரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற ராகவா லாரன்ஸ், “நீங்கள் என் பாட்டி போல இருக்கிறீர்கள். உங்களுக்கு விரைவில் சொந்த வீடு கட்டித் தருகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், கையில் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை அளித்துள்ளார்.