நேற்று இயக்குனர் மஞ்சுநாத்தின் 'பொறுக்கீஸ் அல்ல நாங்கள்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் கரு.பழனியப்பன் ராதாரவி உடனான தன் நட்பு குறித்து விவரித்தார்.
"ராதாரவி சார் எப்பவும் என் மரியாதைக்கு உரியவர். நான் படம் பண்ணும் போது அவர் முழுக்க சங்கச் செயல்பாடுகளில் இருந்தார், அந்த நேரத்தில் எப்போதாவது தொலைபேசியில் கூப்பிடுவார். நான் எப்பவும் படப்பிடிப்பு நேரங்களில் தொலைபேசியை கையில் வச்சிருக்க மாட்டேன். சாப்பிடும் போதுதான் எடுத்துப் பார்ப்பேன். அதுல விடுபட்ட அழைப்பில் அவர் அழைப்பு இருக்கும். அப்பறம் நான் கூப்பிடுவேன். நம்ம படத்துல ஏதோ ஒரு கம்பேனி ஆர்ட்டிஸ்ட் ஒரு நாலு நாள் நடிச்சிட்டு போயிருப்பாங்க. அவர்கள் பற்றி சார்கிட்ட ஒரு புகார் வந்திருக்கும். என் படத்தில் ஒன்னும் இருக்காது, ஆனாலும் ராதா ரவி சார், 'உன் படத்தில் நடிக்கிறாரே ஒரு ஆர்ட்டிஸ்ட் அவர் எப்படி? ஒழுங்கா ஷூட்டிங்க்கு வந்தாரா? சொன்ன தேதிக்கு ஒழுங்கா வந்தாரா?' அப்படினு கேட்பாரு. 'இல்ல சார் நம்ம படத்துல எந்த பிரச்சனையும் இல்லை, ஏன் சார்னு' கேட்டா 'இல்லப்பா அவர் மேல ஒரு கம்ப்ளைண்ட் வந்துச்சு, அதான் மற்ற இடத்தில் எல்லாம் எப்படி இருந்தார்னு தெரிஞ்சிக்கணும் இல்லையா, கம்ப்ளைண்ட் கொடுத்தவங்களை மட்டும் கேட்கக் கூடாதுல' அப்டின்னுவாரு. அதுதான் உயர்ந்த பண்பு. அப்படித்தான் எனக்கு ராதாரவி சார் கூட பழக்கம் ஏற்பட்டுச்சு.
திரை உலகத்தில் நாம் எல்லோரையும் எதிர்த்துப் பேசுவோம், ஆனா நம்மை அறிமுகம் செய்தவரை மட்டும் எதிர்த்துப் பேச மாட்டோம். அவர் மேல மரியாதை இருக்கோ இல்லையோ, சபைக்கு அவர் வரும்போது ஒரு பொய் நடிப்பு நடிப்போம். எனக்குத் தெரிஞ்சு இயக்குனர் திரு.பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, ராதாரவி ஒருத்தர்தான் பாலச்சந்தரை எதிர்த்து 'ஏன் நீங்க என்னை கூப்பிடவே மாட்டேங்கிறீங்க? ஏன் நீங்க 'நான்தான் இவனை அறிமுகப்படுத்தினேன்னு சொல்லமாட்டேன்றீங்க? உங்களுக்கு என்ன நான் அவளோ மட்டமா போனவனா?' சண்டை போட்ட ஒரே ஆள் எனக்கு தெரிஞ்சு இவர் மட்டும்தான். ராதாரவி சார் சினிமாவில் கம்மியான படங்கள் செய்ததற்கு காரணமும் அதுதான். வெளிப்படையாகப் பேசிவிடுவார், அவரை எப்படி படத்தில் நடிக்க அழைப்பார்கள்".