Skip to main content

'கலைஞர் என்ற பட்டத்தை கொடுத்ததே என் தந்தை தான்' - ராதாரவி  

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
radharavi

 

 

 

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து நேற்று நினைவேந்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (பெப்சி), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.பிறகு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்,செயலாளர்கள் கதிரேசன், S.S.துரைராஜ், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன்,  நடிகர் நடிகைகள் சுஹாசினி, ரேவதி, லிஸி, சரண்யா பொன்வண்ணன், குஷ்பூ, ஷீலா, காஞ்சனா, அம்பிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீப்ரியா, விக்ரம் பிரபு, ராதாரவி, குட்டிபத்மினி, ஜீவா, கணேஷ், ஆர்த்தி, மற்றும் அனைத்து சங்கங்களைச் சார்ந்தவர்களும் மறைந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 

 

 

 

அப்போது நிகழ்வில் பங்குபெற்ற நடிகர் நாசர் பேசும்போது..."ஒரு தனி மனிதரின் ஒரு தலைமுறை முடிந்திருக்கிறது, ஒரு சகாப்தம் முடிந்திருகிறது, தொண்ணுறு ஆண்டுகளிலேயே இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தது போல் செயல்கள் செய்திருக்கிறார். பாடம் நடத்தியிருக்கிறார் என்பதை விட, பாடமாக இருந்திருக்கிறார் என்பதே பொருந்தும். சினிமா இந்தளவுக்கு தழைத்திருகிறது என்றால் அதற்கு கலைஞர் அவர்கள் தான் காரணம்" என்றார்.

 

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது... "அந்த காலத்தில் கலைஞர் வசனம் என்று பெயர் போட்டால் தான் மக்கள் படம் பார்க்கவே வருவார்கள். மேலும் கலை, பத்திரிக்கை, அரசியல், சினிமா மற்றும் எழுத்து போன்ற ஐந்து துறைகளிலும் ஜொலித்தவர் கலைஞர்" என்றார்.

 

நடிகர் விஷால் பேசும்போது... "மாமனிதருக்கு மரியாதை செய்ய வேண்டியது நமது கடமை. பொது வாழ்க்கை, சினிமா, அரசியல், போன்ற எதுவாக இருந்தாலும், கலைஞர் அவர்களை மறக்க முடியாது. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டு வந்த முதல் தலைவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார். அவரைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்" என்றார்.

 

நடிகர் ராதாரவி பேசும்போது... "கலைஞர் என்ற பட்டப் பெயர் கொடுத்ததே எனது தந்தை எம்.ஆர்.ராதா அவர்கள் தான் என்பதை பெருமையுடன் கூறிகொள்கிறேன். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எல்லோரிடமும் பேசக்கூடிய ஒரு தலைவர். ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து தமிழ் மொழி, கலாச்சாரம், தமிழர்கள் இவையாவும் இருக்கும் வரை கலைஞர் இறக்க மாட்டார்" என்றார்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்