நடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை தொடங்கி நடந்துவருகிறது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை, மேற்கு தாம்பரம், சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது. படத்தில் நடித்துள்ள நடிகர் ராதாரவி நிகழ்வில் விஜய் குறித்து பேசினார்...
"என் அன்பு இளவல், உங்கள் அனைவரின் அபிமான தளபதி விஜய் ஹீரோவாக நடித்த முதல் படத்தில், நான்தான் அவரது அப்பாவாக நடித்தேன். 'நான் நன்றாக நடிக்க அவரும் ஒரு காரணம்' என பிற்காலத்தில் ஒரு வார இதழில் விஜய் என்னை குறிப்பிட்டார். இப்படி நன்றியுடன் குறிப்பிட்ட ஒரே நடிகர் விஜய்தான்"
என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோது விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ராதாரவி பேசுவதற்கு தடையாக உற்சாகத்துடன் ஆரவாரம் செய்துகொண்டே இருக்க,
"நீங்கள் உண்மையிலேயே விஜய் ரசிகர்களா இருந்தா அமைதியா இருந்து பாராட்டுவதை கேளுங்க" என்றார். தொடர்ந்து, "நான் கார்ல வரும்போது விஜய் ரசிகர்கள்தான் அமைதியானவங்கன்னு சொல்லிக்கிட்டுருந்தேன். ஆனா, நான் தப்பா சொல்லிட்டேன். என் நண்பர்தான் கலாநிதி மாறன். அவர் தப்பா எடுத்துக்கக்கூடாது. இந்த விழாவை இங்க வைக்கிறதுக்கு பதிலா பீச்சுல வச்சிருக்கலாம். அவ்வளவு கூட்டம் இருக்கு" என்றார்.
மேலும், "கலாநிதி மாறனுக்குத் தெரியும், எப்போ சர்காரை கையில் எடுக்கணும்னு. இப்போ நடக்குற சர்கார் சரியா நடக்கல. அதான் இப்போ எடுத்துருக்கார். தமிழ் சமூகத்துக்கு தம்பி தளபதி விஜய் தேவை" என்றார்.