'புஷ்பா' பட வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமான புஷ்பா 2 - தி ரூல் படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகியிருந்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.1500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜூன் திரையரங்கிற்கு சென்றதால் அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகனும் அடிப்பட்டு மயக்கமடைந்து விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கடந்த 18ஆம் தேதி மூளைச்சாவடைந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும் புஷ்பா 2 படம் வசூல் ரீதியாக தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த சூழலில் இப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்து சில தகவல்கள் உலா வந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்து, படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், “புஷ்பா 2 படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இந்த மிகப்பெரிய விடுமுறை காலத்தில் புஷ்பா 2 படத்தை திரையரங்குகளில் மட்டும் பாருங்கள். 56 நாட்களுக்கு இந்தப் படம் எந்த ஒ.டி.டி. தளத்திலும் வெளியாகாது” என தங்களது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.